சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்த இலக்கியத் திருவிழாவின் ஒரு பகுதியாக, வரலாற்று ஆசிரியர் ஆ.ரா.வேங்கடாசலபதி, '1930களில் சென்னையும் கலை, இலக்கியச் சூழலும்' என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசியதாவது:
தமிழ்ச் சூழலில் பல நாளிதழ்கள், பருவ இதழ்கள் வந்த போதும், 1920 - 1930களில் வெளிவந்த முக்கியமான மூன்று இதழ்கள் 'மணிக்கொடி, கலைமகள், ஆனந்த விகடன்' ஆகியவை.
கடந்த 1920களில், தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்தது. அப்போது தான் சங்கரதாஸ் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், பாரதியார், வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா உள்ளிட்ட ஆளுமைகள் இறந்தனர்.
பாரதியார் இருந்த போது, அவர் எழுதியவை அவ்வளவாக அறியப்படவில்லை.
அவர் இறந்த பின், பிரிட்டிஷார் அவரின் படைப்புகளுக்கு தடை போட்ட போது தான், அவரின் சகோதரர் விஸ்வநாத அய்யர், அவரின் புனைபெயரில் எழுதப்பட்ட படைப்புகள் உட்பட பலவற்றை அச்சிட்டு வெளியிட்டார்.
புதிதாக எழுத வந்தோரிடம் அது பெரும் தாக்கத்தை உருவாக்கியது. அவர் கவிதை வரிகளில் இருந்து எடுத்து, பத்திரிகைகளுக்கு தலைப்பாக வைத்தனர். அதன்பின் தான் 'பாரதி நாள்' என்ற ஒன்று கொண்டாடப்பட்டது.
அவர் வழி வந்த பாரதிதாசன் உள்ளிட்டோர் வீரியத்துடன் இயங்கினர். தமிழ்ச் சிறுகதை, கட்டுரை, கவிதைகளில் மேக வெடிப்பைப் போல் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதற்கு காரணம் பாரதியார்.
சிறுகதைகளில், புதுமை பித்தன், கு.ப.ராஜகோபாலனும் பெரும்பங்காற்றினர். கட்டுரைகளில், வ.ரா எனும் வ.ராமசாமி மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
விமர்சனத் தமிழையும் அவர், 'மணிக்கொடி'யின் வாயிலாக மேம்படுத்தினார். அதே காலத்தில், சிட்டி, எஸ்.வி.வி., உள்ளிட்டோரும் ஆங்கில இதழ்களில் எழுதினர்.
கடந்த, 1930களில் எழுதியோர் இருமொழிகளில் புலமை பெற்றிருந்தனர். அதேகாலகட்டத்தில் தான், தமிழில் பிற மொழிகளில் இருந்து அதிகளவில் மொழிபெயர்ப்பு நுால்கள் வெளியாயின.
விசா காண்டேகர் வங்காள மொழியில் இருந்தும் ஹிந்தியில் இருந்தும் தமிழில் மொழிபெயர்த்தார்.
பாவண்ணன், சதாசிவம், நல்லத்தம்பி ஆகியோர் கன்னடத்தில் இருந்து மொழி பெயர்த்தனர்.
அதேபோல, எண்டமூரி வீரேந்திரநாத் தெலுங்கில் எழுதியவையும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. சரவணமுத்துப்பிள்ளை, கால்டுவெல், எல்லீஸ் உள்ளிட்டோரின் தமிழாய்வுகள் வெளிவரத் துவங்கின.
இந்த காலகட்டத்தில் தான் ஹிந்தி கட்டாய சட்டம் வருகிறது. அப்போது தான், திராவிட இயக்க எழுத்தாளர்களும் செல்வாக்கு பெறத் துவங்கினர். அவர்கள், பேச்சு மற்றும் விவாதத் தமிழை வளர்த்தனர்.
அதுவரை கேலிப்பொருளாக இருந்த தமிழ்ப் புலவர்கள் சொற்பொழிவாளர்களாக மறுமலர்ச்சி பெறுகின்றனர். 1937ல் வெள்ளை வாரணர் என்பவர், முதல்வருக்கே கண்டன கட்டுரை எழுதும் அளவுக்கு தமிழாசிரியர்கள் எழுச்சி பெறுகின்றனர்.
இப்படியாக, தமிழ் இதழியல் வளர்ச்சிக்கும், பேச்சு, எழுத்து வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய காலக்கட்டமாக 1930களைக் கூறலாம். அதற்கு முன்னோடியாக இருந்தவர் பாரதியார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -