இசையின் மகத்துவம் மனதை குதுாகலப்படுத்தி, குளிர்ச்சியூட்டும். இத்தன்மை வாய்ந்த இந்த மாமருந்தை, ரசனையுடன் ரசிகர்களுக்கு கொடுக்கத் தயாரானார், நெய்வேலி சந்தானகோபாலன். ஆழ்வார்பேட்டையில் இந்நிகழ்வு நடந்தது.
முதலாவதாக ரீதிகவுளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த வர்ணத்தை பாடினார். இதில் பாடிய சிட்டை ஸ்வரங்கள், ரசிகர்களின் சிந்தனையை சிதறவிடாமல், பாடிய ஸ்வரத்திலேயே சிக்க வைத்தது.
மோதக ப்ரியனின் அருள் வேண்டி, கோடீஸ்வர அய்யர் இயற்றிய ரூபக தாளத்தில் 'வாரண முகவா துணை வருவாய் அருள்வாய் தயவாய்' எனும் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை பாடினார். இதில் பாடிய ஸ்வர அமைப்பு, சொக்க வைத்தது.
பூச்சி சீனிவாச அய்யங்கார் இயற்றிய, ரீதிகவுளை ராகத்தில் அமைந்த 'சத்குரு சுவாமிகி' எனும் கீர்த்தனையை பாடி பரவச மூட்டினார். சரணத்தில் 'வசுதல' எனும் வரிகளை பாடியவிதம், மெய் மறக்கச் செய்தது.
பின், ஹரிகாம்போஜி ராகத்தை துவங்கினார். ராகம், தோய்வுராமல் செல்ல அதே ராகத்தை, வயலின் வித்வான் எம்.ஆர்.கோபிநாத் பின் தொடர்ந்து வாசித்தது, ரசிகர்களை சகலமும் மறக்க வைத்து, இசை நீச்சல் போட வைத்தது.
லய வித்வான்கள், லய சாரல் மழையைப் பொழிந்து, அதில் ரசிகர்களை நனையச் செய்தனர். தொடர்ச்சியாக, தேனுகா ராகத்தை பாடினார். சில இடங்களில் மந்திர ஸ்தாயியில் பாடியது, மகத்துவமாக இருந்தது.
இதே தேனுகா ராகத்தில், தியாகராஜர் இயற்றிய 'தெலியலேது ராமா' எனும் கீர்த்தனையை பாடி, அந்த ராமரை சித்தம் முழுதும் சிந்திக்க வைத்தார். இதில் 'ஸ ரி ஸ ஸ ஸ ஸ நி ரி நி ரி' என்ற பிரயோகத்தை வைத்து பாடிய இவரது குரலில், ரசிகர்கள் மயங்கிக் கிடந்தனர்.
இசை மயக்கம் தெளிந்தும், தெளியாமல், அடுத்த பாடலுக்கு தயாரானவர்களாக ரசிகர்கள், நாற்காலியில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
மனதை மயிலிறகை கொண்டு வருடியது போல, காபி ராகத்தை கொண்டு ரசிகர்களின் மனதை வருடினார். இதில் 'பாகி கல்யாண ராம்' எனும் தியாகராஜரின் ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனையை பாடி, கச்சேரியின் நிறைவுப் பகுதிக்குள் நுழைந்தார்.
நிறைவாக 'பவமான' எனும் மங்களம் பாடி, ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கு கூட்டிச் சென்றார், கலைத்தாயின் தலைமகன்களில் ஒருவரான இசை மகன்.
- சத்திரமனை ந.சரண்குமார்.