சென்னை,:சென்னை பல்கலை சார்பில், தென் மண்டல பல்கலைக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
மாணவியருக்கான இந்த போட்டியில், சென்னை பல்கலை உட்பட, தென்மாநில அளவில் உள்ள பல்கலை அணிகள் பங்கேற்றன.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மகாத்மா காந்தி பல்கலை மற்றும் கோல்கட்டா பல்கலை அணிகள் மோதின. அதில், மகாத்மா காந்தி பல்கலை அணி, 74 - 60 என்ற கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை வென்றது.
அனைத்து போட்டிகளின் முடிவில், நடப்பு சாம்பியனான சென்னை பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இரு அணிகளும் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடின.
அதன்படி, சென்னை பல்கலை அணி ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. குறிப்பாக சென்னை பல்கலை வீராங்கனையர் சுருதி 23 புள்ளிகளையும், சத்யா 21 புள்ளிகளையும் பெற்று, போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினர்.
முடிவில், 75 - 46 என்ற அபார புள்ளிக்கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலையை வீழ்த்தி, சென்னை பல்கலை அணி 'சாம்பியன்' கோப்பையை தட்டிச் சென்றது.
இந்த வெற்றியால், சென்னை பல்கலை மூன்றாவது முறையாக 'சாம்பியன்' கோப்பை யை வென்றது குறிப்பிடத்தக்கது.