சென்னை, சர்வதேச 'பிடே ரேட்டிங் செஸ்' போட்டியில், சென்னை வீரர் அஜீஸ் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.
செங்கல்பட்டு சதுரங்க சங்கம் ஆதரவுடன், 'மவுன்ட் செஸ் அகாடமி' சார்பில், குருநானக் சர்வதேச 'பிடே ரேட்டிங் செஸ்' போட்டி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி வளாகத்தில், கடந்த மூன்று நாட்களாக நடந்தது.
இந்த போட்டியில், 1,600 'ரேட்டிங்' கீழ் உள்ளவர்கள் மற்றும் 8, 10, 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், 18 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 240 சர்வதேச 'ரேட்டிங்' பெற்ற வீரர்கள் உட்பட மொத்தம் 405 பேர் பங்கேற்றனர்.
போட்டிகள் ஓபன் 'சுவிஸ்' முறையில், ஒன்பது சுற்றுகள் வீதம் நடத்தப்பட்டன.
அனைத்து சுற்றுகள் முடிவில், எட்டு புள்ளிகள் பெற்று, சென்னையைச் சேர்ந்த அஜீஸ் முதலிடத்தை பிடித்து, 40 ஆயிரம் ரொக்க பரிசையும், கோப்பையையும் வென்றார்.
அவரைத் தொடர்ந்து, செங்கல்பட்டு பாலமுருகன், சதீஷ் உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.