சென்னை, விரிவாக்கப் பகுதிகளான மணலி, அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி மண்டலங்களில், 866.34 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டப் பணி வேகமாக நடக்கின்றன.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 9.91 லட்சம் குடிநீர், கழிவு நீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
இதில், 75 கோடி லிட்டர் கழிவு நீராக வெளியேறி சுத்திகரித்து, மறுசுழற்சி பயன்பாடுக்கும் மீதமுள்ள நீர் கடலிலும் விடப்படுகிறது.
தற்போது, 4,600 கி.மீ., கழிவு நீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், விரிவாக்கப் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஒவ்வொரு பகுதியாக நடக்கின்றன. மணலி, அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி மண்டலங்களில், 866.34 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் வேகமாக நடக்கின்றன.
இதன் வாயிலாக, 60 ஆயிரம் கழிவு நீர் இணைப்புகள் வழங்கி, 6.03 லட்சம் பேர் பயன் அடைவர் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.
விரிவாக்கப் பகுதிகளில் நடைபெறும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 20 முதல் 60 சதவீதம் வரை முடிவடைந்துள்ளன. இம்மாத இறுதிக்குள், அனைத்துப் பணிகளையும் முடித்து, இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்வாயிலாக, விரிவாக்கப் பகுதியில் ஏற்படும் கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்.