சென்னை, :சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., கோயம்பேடு அங்காடி வளாகத்துக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு, தனியார் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய, வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் காய், கனி, பூ மொத்த விற்பனைக்கான அங்காடி வளாகம், 1996ல் திறக்கப்பட்டது. இந்த வளாகத்தின் எதிர்கால விரிவாக்கத்துக்காக, இங்குள்ள தனியார் நிலங்கள், 1998ல் கையகப்படுத்தப்பட்டன.
இந்த வகையில், கோயம்பேடு கிராமத்துக்கு உட்பட்ட இரண்டு சர்வே எண்கள் உட்பட்ட, 4.89 ஏக்கர் நிலம், 1998ல் கையகபடுத்தப்பட்டது. இதற்கான இழப்பீடு வழங்கும் உத்தரவு, 2001ல் பிறப்பிக்கப்பட்டது.
இந்த இழப்பீடு தொகை தொடர்பாக, நிலத்தின் பழைய உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலங்கள் சி.எம்.டி.ஏ., பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த குறிப்பிட்ட நிலங்களுக்கு, 'தி செயின்ட் ஆல்பர்ட் கல்வி அறக்கட்டளை' பெயருக்கு, 2018ல் இணையவழி பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அறிந்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், மொத்த விற்பனை அங்காடி திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு தனியார் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய, சென்னை கலெக்டருக்கு கடிதம் எழுதினர்.
இதன் அடிப்படையில், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர், மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் தெரியவந்த தகவல்கள் அடிப்படையில், தனியார் கல்வி அறக்கட்டளை பெயருக்கு, 2018ல் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலங்களின் பட்டா தற்போது, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில் இணையவழி பட்டா மாறுதல் என்ற பெயரில் வழங்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, பல்வேறு புகார்கள் வருகின்றன.
இது போன்ற தவறான பட்டாக்களை பயன்படுத்தி, அரசு நிலங்களில் தனியார் பெயரில் கட்டட அனுமதி பெற்றுவிடும் சூழல் நிலவுகிறது.
எனவே, பட்டா வழங்கும் பணிகளில் கீழ் நிலையில் நடக்கும் குளறுபடிகளை தடுக்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.