உத்திரமேரூர், காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 34. இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு மையம் ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
அதே பயிற்சி மையத்தில் பயின்ற வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூரைச் சேர்ந்த, 26 வயது இளம்பெண் ஒருவருக்கும், ராஜேஷுக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று ராஜேஷ், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லக்கோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில், 'சூழ்நிலை சரியில்லை, ஜாதக பொருத்தம் சரியில்லை' என காரணங்கள் கூறி, ராஜேஷ் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
பெண்ணின் குடும்பத்தினர், ராஜேஷிடம் பேச்சு நடத்தியதில், 'தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை' என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அப்பெண்ணுக்கு திருவள்ளூர் மாவட்டம், மணவாளன் நகரைச் சேர்ந்த வேறோரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், அந்த வாலிபரின் 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு, ராஜேஷ் இளம்பெண்னுடன் தான் சேர்ந்து எடுத்துக் கொண்ட 'செல்பி' படங்களை அனுப்பி, திருமணதை நிறுத்தினார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் சாலவாக்கம் போலீசில் நேற்று புகார் அளித்தார். விசாரித்த போலீசார் ராஜேஷை கைது செய்து, காஞ்சிபுரம் சிறையில் அடைத்தனர்.