சென்னை, :சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக விம்கோ நகர் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தைச் சுற்றி ஜோதி நகர், சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ரயில் பாதை, குடியிருப்புகளுக்கு நடுவே உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த ரயில்வே 'கேட்' வாயிலாகத் தான் பேருந்து நிலையங்கள், மார்க்கெட், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதை மூடி, புதிய சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பயணியரின் கோரிக்கையை ஏற்று, விம்கோ நகரில் உள்ள ரயில்வே கேட்டை நீக்கி, புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கியது. இருப்பினும், மழைக்காலம் வந்ததால், இப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கட்டய்யா கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன், இங்கு சுரங்கப்பாதை பணிகள் வேகமாக நடந்தன. கடந்த மாதத்தில் பெய்த மழையால், இங்கு பணிகள் மெத்தனமாக நடக்கிறது.
ஏற்கனவே தோண்டிய பள்ளத்திலும் குளம் போல, மழை நீர் தேங்கியுள்ளது. எனவே, பயணியரின் நலனைக் கருத்தில் வைத்து, இங்குள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சென்னை ரயில் நிலையக் கோட்ட அதிகாரி கூறுகையில், 'ரயில் பாதையைக் கடந்து செல்ல வசதியாக, விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே, 5 கோடி ரூபாய் மதிப்பில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. மழைக்காலம் என்பதால், இப்பணியை முழு வீச்சில் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது மழை முடிந்துள்ளதால், அங்கு தேங்கியுள்ள நீரை அகற்றி, விரைவில் முழு வீச்சில் பணியை துவங்க உள்ளோம்' என்றார்.