திருவொற்றியூர், :திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார் ஆகிய மண்டலங்களில், கொசஸ்தலை வடிநிலத் திட்டத்தின் கீழ், 3,220 கோடி ரூபாய் செலவில், ராட்சத மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
அத்துடன், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல தொகுப்புகளாக, வடிகால் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த, பருவமழையின் போது, சில இடங்களில் முடிக்கப்பட்ட வடிகால்கள் வழியாக வெளியேறிய மழை நீரால் பாதிப்பு குறைவாக இருந்தது.
இந்நிலையில், மழை நீர் வடிகால் முழுதுமாக முடிக்கும் பட்சத்தில், மழை நீர் தேங்காத நிலை ஏற்படும் என்பதால், மண்டலம் தோறும், மழை நீர் வடிகால் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஆனால், திருவொற்றியூர் மண்டலத்தின் எழுத்துக்காரன் தெரு, கிராமதெரு, ஜோதி நகர், எண்ணுார் விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
ஒப்பந்ததாரர்கள் மெத்தன போக்கால், பணிகளும் மந்தமடைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில், மாதக்கணக்கில் பணிகள் செய்யாமல் உள்ளனர்.
இதனால், வீடு மற்றும் கடையை விட்டு வெளியேற முடியாமல் தவியாய் தவிக்கின்றனர். தவிர, ஆங்காங்கே இணைக்கப்படாமல் இருக்கும் கால்வாய்களில், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.
'சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, முறையாக பணி மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை கண்டிக்க வேண்டும். மீறும் பட்சத்தில், அவர்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்வதுடன், மறு ஒப்பந்தங்கள் எடுக்க முடியாத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, கோரிக்கை எழுந்து உள்ளது.