உடுமலை;புத்தக திருவிழாவுக்காக, உடுமலை பகுதி மாணவ, மாணவியருக்கு, கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், 19வது புத்தக திருவிழா, வரும் 27ம் தேதி முதல் பிப்., 5ம் தேதி வரை திருப்பூர் காங்கேயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்தில் நடக்கிறது.
இந்த புத்தக திருவிழாவை முன்னிட்டு, உடுமலை பகுதியிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கவிதை, கட்டுரை, ஓவியம் என பல்வேறு பிரிவுகளில் கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 6- 8 மற்றும் 9-12 என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடந்த போட்டிகளுக்கு, நுாலக வாசகர் வட்ட நிர்வாகி மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.
உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாகராஜ் துவக்கி வைத்தார். இதில், உடுமலை ஒன்றிய பகுதியைச்சேர்ந்த, 237 மாணவ, மாணவியர் ஓவியம், கவிதை, கட்டுரை போட்டியில் பங்கேற்றனர். இதே போல், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் போட்டிகள் நடந்தன.
இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமாக பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தக திருவிழாவில், பரிசுகள் வழங்கப்படும். இதில், பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.