சென்னை, வரதட்சணை கொடுமையால் மனமுடைந்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டிய கணவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மாமனார், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியை தேடி வருகின்றனர்.
சென்னை, வேளச்சேரி, காமராஜர்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் - விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகள் விமலா, 26; பி.இ., முடித்த இவர், ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிந்தார்.
இவருக்கும், போரூர், ஆலப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக், 30, என்பவருக்கும், 2020 ஏப்., 26ம் தேதி, திருமணம் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணத்தால், கோவிலில் வைத்து திருமணம் நடத்தப்பட்டது. அப்போது, சீதனமாக மகளுக்கு, 30 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் கொடுத்துள்ளனர். தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கார்த்திக் சபரிமலை சென்றதால், கடந்த டிச., 24ம் தேதி முதல், விமலா குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்தார்.
கடந்த, 6ம் தேதி இரவு, அங்கு சென்ற கார்த்திக், விமலா மற்றும் அவரது பெற்றோரிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில், விமலாவை தெருவில் இழுத்து போட்டு அடித்து உதைத்து உள்ளார்.
பின், ஒன்றரை வயது பெண் குழந்தையை, விமலா கையில் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓட முயன்றார். அப்பகுதி மக்கள் உதவியுடன் குழந்தையை மீட்டனர்.
அப்போது விமலா, 'குழந்தையை என்னிடம் இருந்து பிரிக்காதே, ஏன் தெருவில் இழுத்து போட்டு அடித்து கொடுமைப்படுத்துகிறாய்' எனக் கேட்டார். இதற்கு, 'குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு, எப்படியாவது செத்து தொலைந்து போ' என, கார்த்திக் கூறி உள்ளார்.
இதில், மனமுடைந்த விமலா, துாக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து விசாரித்த கிண்டி போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக, கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள கார்த்திக்கின் பெற்றோர் சேகர், ராதா, சகோதரி சுமதி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
விமலா அமைதியானவள். கார்த்திக்கின் பெற்றோர், அடிக்கடி வந்து வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்தனர். சம்பவத்தன்றும், கார்த்திக், விமலாவை தெருவில் இழுத்து போட்டு, அடித்து உதைத்தார். நாங்கள் தலையிட்டு, விமலாவையும், அவர் குழந்தையையும் காப்பாற்றினோம். இதனால், விமலா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜர்புரம் பகுதிமக்கள்.
விமலாவின் பெற்றோர் கூறியதாவது:திருமணத்திற்கு முன் மகள் வேலைக்கு செல்வார், கொரோனா காரணத்தால், வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவில்லை. இதனால், மொய் பணம் கிடைக்காமல் செய்து விட்டதாக கூறி, கார்த்திக்கின் பெற்றோர் மன உளைச்சல் கொடுத்தனர். பின், 150 சவரன் நகை, சொகுசு கார் அல்லது 'புல்லட்' வாங்கித் தர வலியுறுத்தினர்.'திருமணத்திற்கு முன் இது குறித்து பேசவில்லையே' என கேட்டதற்கு, 'அப்படி தான் பேசுவோம். நாங்கள் கேட்டதை தந்து தான் ஆக வேண்டும்' என, கார்த்திக்கின் பெற்றோர் சேகர், ராதா சகோதரி சுமதி, அவரது சித்தப்பா, மாமா ஆகியோர் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்தனர்.கர்ப்பிணி என்றும் பார்க்காமல், வேலைக்காரி போல மகளை நடத்தினர். இது குறித்து, கடந்தாண்டு, கிண்டி மகளிர் போலீசில் புகார் அளித்தோம். போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். அதன் பின், கொடுமை பல மடங்கு அதிகரித்து, தற்கொலை நிலைக்கு தள்ளிவிட்டனர். போலீசார், நாங்கள் கொடுத்த புகாரின்படி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை. மகள் தற்கொலைக்கு காரணமான, அனைவரையும் கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.