சென்னை, பொங்கல் திருநாளை முன்னிட்டு, தி.மு.க., சென்னை தெற்கு மாவட்டம் சார்பில், 3,000 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இளைஞர் திருவிழா, சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
ஒரு மாதம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலிடம், இரண்டாமிடம் பிடித்த குழுவுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி பணப்பரிசு மற்றும் கிரிக்கெட் மட்டை தொகுப்பு வழங்கினார். பின், அவர் பேசியதாவது:
அமைச்சர் சுப்பிரமணியன், இந்த கிரிக்கெட் அணியை எப்படி ஒருங்கிணைத்து நடத்தினார் என ஆச்சரியமாக உள்ளது. எனக்கும் தெற்கு மாவட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மரக்கன்று நடும் விழா, ஆணழகன் போட்டி, கணினி மையம் பரிசளிப்பு, மாரத்தான் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். விளையாட்டை ஊக்குவிப்பதில், அமைச்சர் சுப்பிரமணியன் சிறந்து விளங்குகிறார். விளையாட்டின் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டால் புத்துணர்ச்சி, நேரக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் மூர்த்தி, எம்.பி.,க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன், தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சியின் பகுதி, வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.