ஸ்ரீவில்லிபுத்தூர் ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட இரு வழக்குகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர்.
சாத்தூரை சேர்ந்தவர் ரவீந்திரன் 49. இவரது சகோதரி மகனுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூலம் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் விஜய் நல்லதம்பி ரூ.30 லட்சம் பணம் பெற்றார்.
ஆனால் விஜய் நல்ல தம்பி வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திரும்ப வழங்கவில்லை.
குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து விஜய் நல்ல தம்பி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.3 கோடி வரை வாங்கி விட்டு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏமாற்றி விட்டதாக விஜயநல்ல தம்பி புகாரில் குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி மீது மற்றொரு வழக்கும் 2021 நவ., ல் பதிவு செய்தனர்.
இவ்வழக்குகளில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 2022 ஜன., 5ல் கர்நாடக மாநிலம் ஹசனில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தற்போது ராஜேந்திர பாலாஜி இடைக்கால ஜாமின் பெற்றுள்ளார்.
இந்நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதிகா குமார் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.
ஒரு வழக்கில் ராஜேந்திர பாலாஜி, உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் ராமகிருஷ்ணன், அவரது உதவியாளர் நாகேஷ், ஓசூர் பா.ஜ., செயலாளர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., ஐ.டி. பிரிவு தலைவர் பாண்டியராஜன் மீது 15 பக்க குற்றப்பத்திரிகையை 26 சாட்சிகளுடனும், மற்றொரு வழக்கில் விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் மற்றும் உதவிய 4 பேர் உட்பட 7 பேர் மீது 28 பக்க குற்றப்பத்திரிகையை, 21 சாட்சிகளுடனும் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.