சென்னை :தமிழக சட்டசபையில் இதுவரை இல்லாத நிகழ்வாக, அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக படிப்பதை, கவர்னர் ரவி தவிர்த்தார். அவர் ஆட்சேபம் தெரிவித்த கருத்துக்களை, உரையில் இருந்து அரசு நீக்க மறுத்ததால், இப்படி, 'நோஸ்கட்' செய்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின், சபை விதிகளை தளர்த்தி, கவர்னருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதையடுத்து கோபமடைந்த கவர்னர் ரவி, கூட்டம் முடிவதற்கு முன்பாகவே, சபையில் இருந்து வேகமாக வெளியேறினார்.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 10:01 மணிக்கு துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும், கவர்னர் ரவி எழுந்து, தன் உரையை வாசிக்க துவங்கினார்.
அப்போது, தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கோஷங்கள் எழுப்பினர்
பின், கவர்னர் இருக்கை முன் சென்று, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். காலை 10:07 மணிக்கு, தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, 'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பா.ம.க., சட்டசபை கட்சித் தலைவர் ஜி.கே.மணி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, ஆங்கிலத்தில் எழுதியதை எடுத்து காண்பித்தார். அதன்பின், அந்தக் கட்சி எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.
அதிர்ச்சி
சில நிமிடங்களில், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு திரும்பினர். கவர்னர் தொடர்ந்து தன் உரையை வாசிக்க துவங்கினார். அப்போது, அவர் இரண்டு மற்றும் மூன்றாம் பக்கத்தை படிக்காமல் விட்டு விட்டு, அடுத்த பக்கத்தை வாசிக்க துவங்கினார்.
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் துரைமுருகன் முதல்வர் இருக்கைக்கு சென்று, அதை சுட்டிக்காட்டினார். பின், அவர் அவசரமாக வெளியே சென்று வந்தார். கவர்னர் தன் ஆங்கில உரையை முடித்ததும், சபாநாயகர் அப்பாவு, தமிழ் உரையை வாசிக்க துவங்கினார்.
அவர் கவர்னர் விட்டுவிட்ட பகுதிகளை சேர்த்து படித்தார். சபாநாயகர் உரையை வாசிக்க துவங்கிய போது, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளே வந்து அமர்ந்தனர்.
கவர்னர் காலை 10:48 மணிக்கு, 'வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு' எனக் கூறி, தன் உரையை முடித்தார்.
பின், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடித்ததும், முதல்வர் ஸ்டாலின் எழுந்து பேசியதாவது:
கவர்னருக்கு வரைவு உரையானது, தமிழக அரசால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின் அச்சடிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கு கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.
நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்குமுற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் கவர்னரின் செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலை. எனினும், அரசின் சார்பாக இருக்கிற காரணத்தால், சட்டசபை விதிகளை பின்பற்றி, கவர்னர் உரையை துவக்குவதற்கு முன், எங்களது எதிர்ப்பு எதையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.
சபையில் மிகவும் கண்ணியத்தோடு, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்துள்ள கவர்னருக்கு, முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்கள் கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே கூட, அவர் மாறாக நடந்து கொண்டதுடன், தமிழக அரசு தயாரித்து, கவர்னரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது. இது, சட்டசபை மரபுகளை மீறிய ஒன்றாகும்.
எனவே, சட்டசபை விதி 17ஐ தளர்த்தி, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை, சபாநாயகரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும், சபைக்குறிப்பில் ஏற வேண்டும்.
அதேபோல், இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, கவர்னர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
வெளிநடப்பு
முதல்வர் திடீரென எழுந்து தீர்மானத்தை வாசிக்க துவங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சபையில் இருந்து வெளியேறினர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, 'பாரத் மாதா கீ ஜே; வந்தே மாதரம்' என கோஷமிட்டனர். பின், அவர்களும் வெளிநடப்பு செய்தனர். அதை கண்ட கவர்னர் தன் செயலரை அழைத்து, முதல்வர் பேச்சு குறித்து விபரம் கேட்டார். அவர் விபரத்தை சொன்னதும், கவர்னர் கோபமாக வெளியேறினார்; அவரது பாதுகாவலர் மற்றும் செயலரும் வெளியேறினர்.
அப்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'வெளியே போ' என்று கூச்சலிட்டனர். பகல் 11:33 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது.
கவர்னர் பேச்சின் பின்னணி
தி.மு.க., அரசு அனுப்பிய உரையில், ஆட்சேபகரமான சில விஷயங்களை நீக்கும்படியும், அவ்வையார், விவேகானந்தர் தொடர்பாக சிலவற்றை சேர்க்கும்படியும் கூறி, அந்த உரைக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், கவர்னர் கூறியபடி, நீக்க வேண்டியதை நீக்கவில்லை; சேர்க்க வேண்டியதை சேர்க்கவில்லை. எனவே, கவர்னர் தான் கூறியபடி நீக்க வேண்டியதை படிக்காமல் தவிர்த்தும், சேர்க்க வேண்டியதை சேர்த்தும் பேசியதாக, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
***