உடுமலை:மாவட்ட அளவிலான, ஆதிதிராவிடர் நலத்துறை திட்ட பணிகளை செயல்படுத்தவும், வாழ்வாதாரத்தை முன்னேற செய்யவும், மாவட்ட அளவிலான, ஆதிதிராவிடர் நலக்குழு அமைக்கப்படுகிறது.
கலெக்டர் தலைமையிலான ஆதிதிராவிடர் நலக்குழு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தேவையான கோரிக்கையை, தீர்மானம் வாரியாக பரிந்துரையாக அரசுக்கு அனுப்பி வைக்கும்.
பழைய குழு காலாவதியானதை தொடர்ந்து, புதிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் - தலைவர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்- செயல் உறுப்பினர், சப் - கலெக்டர் மற்றும் இரண்டு ஆர்.டி.ஓ., க்கள், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர், தாட்கோ மாவட்ட மேலாளர் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், 'ஏ, பி, சி மற்றும் டி' ஆதிதிராவிடர் நல அலுவலர்களாக, அரசு மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் பால்ராஜ், பட்டதாரி விடுதி காப்பாளர் ராஜேந்திரன், தாராபுரம் அரசு மாணவர் விடுதி இடைநிலை காப்பாளர் கணேசன், பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி பணியாளர் சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆதிதிராவிட அரசு அலுவலர்களின் மாவட்ட சங்க தலைவராக அம்மாபட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளி இடைநிலை ஆசிரியர் காளிமுத்து; ஆதிதிராவிட அமைப்பின் மாவட்ட தலைவர் வேலுசாமி, மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, நாட்ராயன், வக்கீல் சகாதேவன், விரிவுரையாளர் பொன்னையன், தொழில்துறையை சேர்ந்த நீலமலை முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிட எம்.பி., - எம்.எல்.ஏ.,கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆதிதிராவிடர் நலத்துறையினர் கூறுகையில், 'ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் தரம் உயர்த்த, விடுதி மாணவர்களுக்கான வசதிகள், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், அரசு பணியிடம் மற்றும் கல்வி இடஒதுக்கீட்டில், ஒதுக்கீடு முறையை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்யும். இக்குழுவினர், தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளுக்கு இயங்கும்,' என்றனர்.