உடுமலை:கடந்த புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சோளம், மக்காச்சோளம் போன்றவற்றின் அறுவடை துவங்கியுள்ளது. பொங்கலுக்குள் அறுவடையை முடித்துவிட்டு, அடுத்த போக பயிர் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தண்ணீர் குறைவாக இருந்ததால் விவசாயிகள் குறுகிய கால பயிர் சாகுபடி செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். வெங்காயம், தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டதால் விற்பனை இன்றி அழுகி வீணானது. அதனால், ஏராளமான விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்தாண்டு நல்ல மழை பெய்தது, கால்வாய் பாசனம் கை கொடுப்பது போன்றவற்றால் தண்ணீர் பிரச்னை இருக்காது. இதனால், குறுகிய கால பயிர்களுடன் ஓராண்டு பயிர், நீண்ட கால பயிர் சாகுபடி செய்ய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பணப் பயிர்களான வாழை, மரவள்ளி, மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவை சாகுபடி செய்வதன் வாயிலாக, விவசாயிகள் பொருளாதார ரீதியாக பயனடைய பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.