உடுமலை:உடுமலை அருகே, பழமை வாய்ந்த கோவில் மற்றும் அங்குள்ள சிற்பங்கள் குறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்தனர்.
மடத்துக்குளம் தாலுகா துங்காவியில், பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. கற்றளி முறையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் வளாகத்தில், பழமையான சிற்பங்களும் உள்ளன.
கோவில் வரலாறு, சிற்பங்கள் குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கள ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: உடுமலை வட்டாரத்தில், பாளையக்காரர்கள் ஆட்சி செய்த சான்றுகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, 15ம் நுாற்றாண்டுக்கு பிறகு பெருமளவில் இந்தப்பகுதிகளில் நாயக்கனுார், பாளையம் என கிராமங்களின் பெயர்கள் அமைந்தது குறித்த சான்றுகளை வரலாற்று ஆய்வாளர் பிள்ளை பதிவு செய்துள்ளார்.
மேலும், 13ம் நுாற்றாண்டில் கொங்குச்சோழர்களுக்கு பின் கொங்கு பாண்டியரும், தென் கொங்கையே ஆட்சி செய்து வந்துள்ளனர். துங்காவியில் உள்ள இக்கோவிலை பாண்டிக்கோவில் என்றும் தளவாய்கள் வழிபட்ட போர் தெய்வம் என்றும் தெரிவிக்கின்றனர்.
வளாகத்தில், பாளையக்காரர் காலத்தில், அரச குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும், தளபதிகள் வழிபடுவது போன்று படைப்பு சிற்பங்கள் உள்ளது.
மேலும், இந்த கோவில் கருவறையில், எட்டுக்கை கொண்ட அம்மன் காலடியில் ஒரு அரசன் கீரிடம், கையில் வாளும், கேடயமும் ஏந்தி அம்மனால் சம்ஹாரம் செய்யப்பட்டு கிடக்கிறான்.
இந்த ஊருக்கு அருகில் வஞ்சிபுரம் எனும் பகுதியில் ஏற்கனவே தமிழக அரசின் தொல்லியல் துறையால் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழங்கால கோவில்கள் மற்றும் சிற்பங்கள், மக்களின் வழிபாட்டால், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.