உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் - மதுரை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஸ்டேஷனுக்கு தினமும், பல்வேறு நகரங்களிலிருந்து, நுாற்றுக்கணக்கான ரயில் பயணியர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையிலும், ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.