ஓசூர் : தேன்கனிக்கோட்டையில், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, அந்தந்த ரேஷன் கடைகளில் மக்கள் குவிந்த நிலையில், 'பயோ மெட்ரிக்' கருவி நீண்ட நேரம் செயல்படாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்கும் பணி நேற்று துவங்கியது. அதை பெற, நேற்று காலை முதலே ரேஷன் கடைகளில் மக்கள் குவிந்தனர்.
பொங்கல் தொகுப்பு வழங்க துவங்கிய சிறிது நேரத்தில், 'சர்வர்' பிரச்னையால் பயோ மெட்ரிக் கருவி செயல்படாமல் போனது. காத்திருந்த மக்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், ரிஜிட்டரில் கையெழுத்து பெற்று, பொங்கல் தொகுப்பை வழங்க உத்தரவிட்டது. அவ்வாறு மக்கள் வாங்கி சென்றனர்.
பெரம்பலுார்
பெரம்பலுாரில், -'சர்வர்' சரிவர இயங்காததால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு, பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர்.
கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தின் சர்வர் சரிவர வேலை செய்யாததால், பொதுமக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில், வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இரண்டு மணி நேரத்திற்கு பின், சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டு, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.