நாகப்பட்டினம் : நாகையில், கடன்தொல்லையால், குழந்தையுடன் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
நாகை சவேரியார் கோவில் 'சுனாமி' குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜம்புகேசன் மனைவி மகேஸ்வரி, 30. இவர்களுக்கு 11 வயது மகன், 9 வயது மகள் இருந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் ஜம்புகேசன், கொலை வழக்கில் தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
இதனால், 11 வயது மகனை, வீட்டிற்கு அருகே வசிக்கும் தன் சகோதரி அமுதா வீட்டில் வளர்க்க விட்டுள்ளார். தாயுடன் மகள் வசித்து வந்தார்.
கணவரை சிறையில் இருந்து வெளியில் அழைத்து வர வழக்கு செலவுக்கும், குடும்பம் நடத்தவும் அக்கம் பக்கத்தில் சிலரிடம் அந்த பெண் கடன் வாங்கினார்.
கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. சில மாதங்களாக வீட்டின் வாடகையையும் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், மகேஸ்வரி வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
அப்போது, ஒரே மின்விசிறியில் தாயும், மகளும் துாக்கிட்டு சடலமாக தொங்கினர். வெளிப்பாளையம் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, நாகை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.