உடுமலை:சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில், தமிழர் திருநாள் திருவிழா வரும், 16ம் தேதி துவங்குகிறது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவும், உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்; சுவாமிக்கு பாலாபிேஷகம் செய்து வழிபடுகின்றனர்.
மார்கழி மாதம் துவங்கியதும், உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், நாள்தோறும் இரவு நேரங்களில், சலகெருது மறித்து, கும்மி, தேவராட்டம் ஆடி பயிற்சி பெறுகின்றனர்.
தைப்பொங்கலையொட்டி, ஆல்கொண்டமால் கோவிலில் நடக்கும் திருவிழாவுக்கு, கிராம சலகெருதுகளை அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்வார்கள். பின்னர், சலகெருதுகளை மேய்ச்சலுக்காக அனுப்பி வைப்பார்கள்.
மேலும், தைத்திருநாளின் போது, மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகள் ஆல்கொண்டமாலனுக்கு உரியது என கருதும் மக்கள், அக்கன்றுகளை, கோவிலுக்கு தானமாக வழங்குகின்றனர்.
கோவிலில், வரும் 16 தேதி தமிழர் திருநாள் திருவிழா ஆரம்பமாகிறது. அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், தீபாரதனையுடன் விழா துவங்குகிறது.வரும், 17ம் தேதி, பகல், 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், வரும் 18ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம்; மாலை, 6:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு, 7:00 மணிக்கு மகா தீபாரதனை, இரவு, 9:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, வான வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் கால்நடைகளின் தற்காலிக பராமரிப்புக்கு, பக்தர்கள், ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.