உடுமலை:நான்கு ரோடு சந்திப்பிலுள்ள, உயர் மின் கோபுர விளக்கை, மாற்றியமைத்து, நெரிசலை குறைக்க ரவுண்டானா ஏற்படுத்த வேண்டும் என பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும், நான்கு ரோடு சந்திப்பு, பெதப்பம்பட்டியில் உள்ளது.
இங்கு, இரு வழித்தடங்களில் வரும் பஸ்களும், பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாததால், ரோட்டிலேயே நிறுத்தி, பயணியகளை ஏற்றி, இறக்கி வருகின்றன. மேலும், பிரதான ரோடுகள் சந்திக்கும் பகுதியாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.
இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, நெடுஞ்சாலைத்துறை சாார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில், குறிப்பிட்ட துாரத்துக்கு, சென்டர் மீடியனும் வைக்கப்பட்டது.
ஆனால், உடுமலை ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக, உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டும், நெரிசல் குறையவில்லை.
பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். வாகனங்களும் விலகிச்செல்ல வழியில்லாமல், மாநில நெடுஞ்சாலை வரை அணி வகுத்து நிற்கிறது.
எனவே, சந்திப்பின் மையப்பகுதிக்கு, உயர் மின் கோபுர விளக்கை இடம் மாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'பெதப்பம்பட்டி நால்ரோட்டில், நெரிசலை குறைக்க, உயர் மின் கோபுர விளக்கை மாற்றியமைக்க வேண்டும். சந்திப்பின் மையப்பகுதிக்கு, கோபுரத்தை இடம் மாற்றுவதால், அப்பகுதி ரவுண்டானா போல, மாறி விடும். தாராபுரம் மற்றும் உடுமலை ரோட்டுக்கு செல்லும், வாகனங்கள் எளிதாக விலகி செல்ல முடியும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.