புதுச்சேரி : புதுச்சேரியில் 'யூடியூப்' சமூக வலைதளத்தில் உள்ள 'வீடியோ'க்களை பார்த்து, நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை மினி வேன் மீது வீசி பரிசோதித்துப் பார்த்த, பிளஸ் 1 மாணவர்கள் உள்ளிட்ட நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, உருளையன்பேட்டை கென்னடி நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின், 46. இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, தன் மினி வேனை சாந்தி நகர் விரிவாக்கம், 2வது குறுக்கு தெரு அருகே ஓட்டி சென்றார்.
அப்போது, அங்கு சாலையோரம் நின்றிருந்த மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டை மினி வேன் மீது வீசியது. அது, வேனின் பக்கவாட்டு கண்ணாடியில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
வெடி சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். உடன், வெடிகுண்டு வீசிய கும்பல் தப்பியது.
தகவலறிந்த சீனியர் எஸ்.பி., தீபிகா, இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்; வெடிகுண்டு நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், ஆறு சிறுவர்கள், வேன் மீது வெடிகுண்டு வீசியது தெரிந்தது.
இது குறித்து, மினி வேன் உரிமையாளர் அகஸ்டின் அளித்த புகாரின்படி, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் நான்கு மாணவர்கள், கூலி வேலைக்கு செல்லும் இரு சிறுவர்கள் சேர்ந்து வெடிகுண்டு வீசியது தெரிந்தது.
அவர்களில் பிளஸ் 1 மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சிறுவர்களை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர்.
அப்போது தான், சிறுவர்கள் ஆறு பேரும், யூடியூப் சமூக வலைதள வீடியோக்களை பார்த்து, நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை அகஸ்டின் வேன் மீது வீசி பரிசோதித்து பார்த்தது தெரிந்தது.
அதைத் தொடர்ந்து நான்கு சிறுவர்களையும் கைது செய்த போலீசார், அவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரியாங்குப்பம் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் இரு சிறுவர்களை தேடி வருகின்றனர்.
Advertisement