பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு, துணிவு படங்களுக்கு அரசு நிர்ணயித்ததை விட, 10 மடங்கு அதிக தொகைக்கு டிக்கெட் விற்கப்பட்டாலும், தியேட்டர்களின் அத்துமீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
தமிழகத்தில், 1,100க்கும் அதிகமான தியேட்டர்கள் உள்ளன. காட்சி ஊடகங்கள், 'ஓடிடி' தளங்களில் புதிய படங்கள் வெளியீடு போன்ற காரணங்களால், பழமையான தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு சினிமா கட்டுப்பாட்டு விதிகள், 1957ன் படி, எந்தெந்த உள்ளாட்சிகளில், எத்தகைய தியேட்டர்களில் எவ்வளவு குறைந்தபட்சம், எவ்வளவு அதிகபட்சம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கலாம் என்பதை மாநில அரசே முடிவு செய்கிறது.
அரசு நிர்ணயித்த கட்டணம்!
தமிழகத்தில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கோரிக்கையை ஏற்று, தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, 2017 அக்., 16ல், தமிழக உள்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு, நடைமுறையில் உள்ளது.
அதில், மல்டி பிளக்ஸ், மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து என, மூன்று பிரிவுகளாக தியேட்டர்கள் வகைப்படுத்தப்பட்டன.அதிலும், 'ஏசி' தியேட்டர், 'ஏசி' இல்லாதது என இரண்டுக்கும், அதிகபட்சம், குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இதன்படி, 'மல்டி பிளக்ஸ்' தியேட்டர்களில் குறைந்த பட்ச டிக்கெட், 50 ரூபாய்க்கும், அதிகபட்சம், 150க்கும் விற்கப்பட வேண்டும். எந்த உள்ளாட்சி பகுதியில் மல்டி பிளக்ஸ் கட்டப்பட்டிருந்தாலும் அதற்கானகட்டணம் இது தான்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், 'ஏசி' தியேட்டர்களில் குறைந்தபட்சம், 40 ரூபாய், அதிகபட்சம், 100 ரூபாய் என்றும், 'ஏசி' இல்லாத தியேட்டர்களில் முறையே, 30 மற்றும் 80 ரூபாய்.
கிராம பஞ்சாயத்து
பகுதிகளில், 'ஏசி' தியேட்டர்களில் முறையே, 25 மற்றும், 75 ரூபாய், 'ஏசி' இல்லாத தியேட்டர்களுக்கு, 20 மற்றும் 50 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், இப்போது இஷ்டம் போல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆன்லைன் டிக்கெட்களும் 'காம்போ ஆபர்' உள்ளிட்ட பெயர்களில் இரட்டிப்பு விலைக்கு விற்கப்படுகின்றன.
டிக்கெட் முடக்கம்!
அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி., சேர்த்தாலும் கூட, 200 ரூபாய்க்கு மேல் அதிகபட்சமாக வசூலிக்க சட்டத்தில் இடமில்லை.ஆனால், சில பெரிய நடிகர்களின் படங்களுக்கு, முதல் சில நாட்களுக்கு ஆன்லைன் டிக்கெட்கள் முடக்கப்படுகின்றன. சில காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்களை ரசிகர் மன்றத்தினரே வாங்கி, ஒரு டிக்கெட்டை, 500 முதல் 2,000 ரூபாய் வரை விற்கின்றனர்.சில தியேட்டர்களில் 'ஆன்லைன் புக்கிங்' டிக்கெட்களை, தியேட்டர் நிர்வாகமே ஆட்களை வைத்து, ரசிகர்களிடம், 500 - 1,000 ரூபாய் வரை 'பிளாக்'கில் விற்கும் முறைகேடும் நடக்கிறது.ஆனால், ஒரு தியேட்டர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விதிமீறல் தாராளம்!
இந்த பொங்கலுக்கு, நடிகர் விஜயின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்தின் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.கோவையில், 100க்கும் அதிகமான தியேட்டர்களில் உள்ள, 220 ஸ்கிரீன்களில், இந்த இரு படங்களும் தலா, 110 ஸ்கிரீன்களில் திரையிடப்படவுள்ளன.மாநிலத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படங்களை வெளியிடும் உரிமையை, ஆளுங்கட்சி மேலிடத்தின் முக்கிய வாரிசின் நிறுவனமே பெற்றிருப்பதால், விதிமீறல்கள் எவ்வித அச்சமுமின்றி அரங்கேறி வருகின்றன.
இவ்விரு படங்களுக்கு 'ஆன்லைன் புக்கிங்' ஏற்கனவே துவங்கிய நிலையில், முதல் நாள் சிறப்புக்காட்சிகள் உட்பட, சில நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்களும் முடக்கப்பட்டு உள்ளன.மொத்தமாக 'புக்கிங்' செய்யப்பட்டு, ஒவ்வொரு டிக்கெட்டும், 500 - 1,500 ரூபாய் வரை 'பிளாக்'கில் ரசிகர்களால் விற்கப்படுகின்றன. அதிலும், ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில், முதல் காட்சிக்கான ஒரு டிக்கெட், 2,000 வரை பிளாக்கில் விற்கப்படுகிறது.தமிழ்நாடு சினிமா விதிகளின்படி, ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் காட்சிகளை வெளியிடுவதற்கு சட்டத்திலேயே இடமில்லை என்று நுகர்வோர் அமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால், தமிழக அரசு இச்சிறப்பு காட்சிகளை அனுமதித்து வருகிறது. தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இப்போதும் நள்ளிரவு 1:00 மணி, காலை 4:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவே சட்டவிரோதம் என்ற நிலையில், அதற்காக, 10 மடங்கு அதிக தொகைக்கு டிக்கெட் விற்கப்படுகிறது.தியேட்டர் விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கே உள்ளது.சுகாதாரம், பாதுகாப்பு, கட்டணம் என, பலவற்றையும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து, கலெக்டருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இப்போது ஆளுங்கட்சி மேலிடத்தின் குடும்பத்தினரே சினிமா தொழிலிலும் கோலோச்சுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதேயில்லை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.- நமது நிருபர் குழு -