கோவை: சீனா மற்றும் ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த மூவருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருவதால், அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணியருக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தவிர, பிற நாட்டு பயணியரில், 2 சதவீதம் பேருக்கு 'ரேண்டம்' முறையில் பரிசோதிக்கப்படுகிறது. கோவை சர்வதேச விமான நிலையத்திலும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
சமீபத்தில், சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த கணவன், மனைவிக்கு பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கொரோனா உறுதியானது.
எனினும், அறிகுறிகள் இல்லாததால் அவர்கள் வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டனர். கொரோனா வகையை கண்டறிய இருவரது சளி மாதிரிகளும் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதுபோல, கடந்த, 7ம் தேதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஷார்ஜா நகரிலிருந்து கோவை வந்த பயணியருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தன.
இதில், கோவை, பீளமேட்டை சேர்ந்த, 20 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இவருக்கும் அறிகுறிகள் இல்லாததால், வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் விமானத்தில் வந்த பிற பயணிகளும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.