ஊட்டி:ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றப்பட்டது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில், 1,500 கடைகள் உள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் பொருட்கள் வங்க ஊட்டி மார்க்கெட்டுக்கு வருகின்றனர். மார்க்கெட் வளாகத்தில், கடை ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து பலர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால், பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மக்கள் நகராட்சியில் புகார் கூறியதை அடுத்து, நகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவின்பேரில், நகராட்சி வருவாய் அலுவலர் சண்முகம், உதவி வருவாய் அலுவலர் நஞ்சுண்டன் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். அகற்றாமல் மறுத்தவர்களின் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். 'மீண்டும் நடை பாதையை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நகராட்சி வருவாய் அலுவலர் சண்முகம் கூறுகையில்,''ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். நடைப்பாதை ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,'' என்றார்.