விசாகப்பட்டினம், ஆந்திராவில் விவாகரத்து கோரி, 'நோட்டீஸ்' அனுப்பிய கணவனை, அவரது மனைவி இரும்பு கம்பியால் அடித்து, தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி கொலை செய்தார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. கணவன் - மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் தனித்தனியாக வசித்து வந்தனர்.
நாகேஸ்வர ராவ் விவாகரத்து கோரி, தன் மனைவிக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது குறித்து நாகேஸ்வர ராவிடம் நேரில் சென்று ஜெகதீஸ்வரி விளக்கம் கேட்டார். அப்போது இருவரிடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ்வரி, அருகில் இருந்த இரும்பு கம்பியால் நாகேஸ்வர ராவ் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த நாகேஸ்வர ராவ் அலறினார்.
இந்த சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் வந்து விடுவர் என்ற பயத்தில், அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் கணவனின் தலையை அழுத்தியுள்ளார்.
இதில் நாகேஸ்வரராவ் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இதையடுத்து ஜெகதீஸ்வரி அங்கிருந்து தப்பி ஓடினார்.
நாகேஸ்வர ராவின் நடமாட்டம் இல்லாததை அறிந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை நடத்திய போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஜெகதீஸ்வரி வந்து சென்றது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கணவனை கொன்றதை ஒப்புக் கொண்டதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.