இந்துார், ''வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் நம் நாட்டின் துாதர்கள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துாரில், ௧௭வது வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாடு நடக்கிறது. இதை நேற்று துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், நம் நாட்டின் துாதர்களாவர். இவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது.
யோகா, ஆயுர்வேதம், குடிசைத் தொழில், கைவினைப் பொருட்கள், சிறுதானியங்கள் என, நம் நாட்டின் பலதரப்பட்ட பெருமைகளை, அவர்கள் தற்போது வசித்து வரும் நாடுகளில் பிரபலப்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்கள், தங்கள் தாய் அல்லது தந்தை வழியிலான நம் நாடு குறித்து தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்; அதை நாம் நிறைவேற்ற வேண்டும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கு அளித்து வரும் பங்களிப்பு குறித்து நம் நாட்டு பல்கலைகள் ஆவணப்படுத்த வேண்டும்; இது எதிர்கால சந்ததியினருக்கு பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென் அமெரிக்க நாடான சூரிநாம் அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மற்றொரு தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக உள்ள முகமது இர்பான் அலி, இந்தியாவுடனான தன் தொடர்பு குறித்து பேசினார்.