சண்டிகர், பஞ்சாபில், போக்குவரத்து துறை அதிகாரி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பஞ்சாப் சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் நேற்று முதல், ஒட்டு மொத்தமாக ஐந்து நாட்களுக்கு பணி விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த்மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள லுாதியானா மண்டல போக்குவரத்து அலுவலகத்தில், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, மண்டல போக்குவரத்து அதிகாரிநரேந்தர் சிங் தாலிவால் என்பவரை லஞ்ச வழக்கில் கைது செய்தனர்.
இந்த கைது தொடர்பாக, பஞ்சாப் சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் சங்கம் சமீபத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில், 80 அதிகாரிகள் பங்கேற்றனர்.
மண்டல போக்குவரத்து அதிகாரி தாலிவால், சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் கைது செய்யப்பட்டதாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் அத்துமீறலை கண்டித்து, நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு பணி விடுப்பு போராட்டத்தில் ஈடுபட, சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
இந்த சட்டவிரோத கைது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தவும், இது தொடர்பான மனுவை முதல்வர் பகவந்த் மானிடம் வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்று முதல் போராட்டம் துவங்கியது.