புதுடில்லி, புதுடில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றும் உறைய வைக்கும் குளிர் நிலவியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத வகையில் கடும் குளிர், அடர்ந்த பனி மூட்டம் நீடித்து வருகிறது.
![]()
|
இந்நிலையில் புதுடில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக நேற்றும் 3.3 டிகிரி 'செல்ஷியஸ்' பதிவானது; இது, குளிர்பிரதேசங்களான ஹிமாச்சல், உத்தரகண்ட் மாநிலங்களை விட மிக குறைந்த வெப்பநிலையாகும்.
தொடர்ந்து வடக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடும் பனிப்பொழிவு ஏற்படுவதாகவும், இது வழக்கத்தைவிட கூடுதல் காலம் நீடிப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வடமாநிலங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளுக்கு உள்ளேயே தஞ்சம் அடைந்துள்ள சூழல் ஏற்பட்டுஉள்ளது.
ரயில்கள் ரத்து
ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுடில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீஹார் ஆகிய மாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, 82 விரைவு ரயில்கள் உட்பட 267 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக ஐந்து விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 30 விமானங்கள் காலதாமதமாக வந்தடைந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.