மாணவியருக்கு கண் மருத்துவ முகாம்
கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பள்ளி மாணவியருக்கான கண் மருத்துவ முகாம், கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமில், கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் சாய் மன்ற நிர்வாககிகள் டாக்டர் பத்மா, வேணுகோபால், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்லமுத்து, துணை தலைவர் தர்மு, தலைமையாசிரியர் ரஹீமாபேகம், முதுகலை ஆசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில், 15 மாணவியருக்கு இலவச கண் கண்ணாடியும், பார்வை குறைபாடு மற்றும் கண்ணில் சதை வளர்ச்சி உள்ள, 32 குழந்தைகளை கண்டறிந்து, கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் வாயிலாக இலவச மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். பள்ளியில் பயிலும் வளரிளம் பெண்களுக்கான, 'தன் சுத்தம் மற்றும் சுகாதாரம்' சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், ஹார்மோன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மருந்து வழங்கப்பட்டது.
கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் முன் முயற்சிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஐ.ஐ.சி.,யின் 'இன்னோவேஷன் கோ ஆர்டினேட்டர்' சோமசுந்தரம் வரவேற்றார். கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் டீன் குமுதாதேவி, நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் பற்றியும், அதன் செயல்பாடுகள், ஐ.ஐ.சி., சார்பாக நடைபெறும் நிகழ்வுகள், அவற்றை எவ்வாறு வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் விளக்கினார்.
சோஷியல் மீடியா ஒருங்கிணைப்பார் பூங்கொடி நின்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை, ஒருங்கிணைப்பாளர் அமுதா மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ராக்கிமுத்து ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு
பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியின் ரோட்ராக்ட் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரியின் ஆலோசகர் சுப்ரமணியம், போக்குவரத்து போலீஸ் ராம்குமார் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். இயக்குனர் சர்மிளா மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லுாரி பேராசிரியர்கள் முனைவர் கிரிபிரகாஷ், முனைவர் பாலாஜி விக்னேஷ், முனைவர் கவிதா, ரோட்ராக்ட் மாணவி சுருதி ஆகியோர், பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தமிழர் பண்பாட்டு திருவிழா
பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரி மற்றும், பொள்ளாச்சி, உடுமலை தமிழிசை சங்கங்கள் சார்பில், தமிழர் பண்பாட்டு திருவிழா, மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கு கலை, இலக்கிய போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் வரவேற்றார். ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் செயலர் அருள்மொழி தலைமை வகித்தார். தலைவர் ரத்தினம் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின் செயலர் கோபாலகிருஷ்ணன் பேசினர். கல்லுாரி முதல்வர் கண்ணன் நன்றி கூறினார்.
பள்ளி மாணவர்கள் பாத பூஜை
பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டி பரத் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பாத பூஜை நடந்தது. பள்ளியின் தாளாளர் டாக்டர் சாந்தி, பள்ளியின் முதல்வர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். மாணவர்களின் உடல்நலம், கல்வி மேம்பட இறை வழிபாடு நடந்தது. மாணவர்கள், பெற்றோருக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர். பெற்றோர், மாணவர்களை வாழ்த்தினர்.
வேளாண், ஊரக மேம்பாடு முகாம்
பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனத்தின் நாட்டுநலப்பணி திட்டத்தின் வாயிலாக, வேளாண் மற்றும் ஊரக மேம்பாடு என்ற தலைப்பில், வாழைக்கொம்பு நாகூரில் முகாம் நடந்தது. அதில், 103 மாணவியர் பங்கேற்றனர். முகாம் துவக்க விழா, நடுநிலைப்பள்ளியில் நடந்தது. கல்லுாரியின் முதல்வர் குமாரவடிவேல், ஊராட்சி தலைவர் சத்தியபானு, என்.ஐ.ஏ., சக்திபுறா விரிவாக்க சேவைத்துறை திட்ட அலுவலர் நாகராஜன் மற்றும் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, கண் பரிசோதனை முகாம் நடந்தது. வாசன் ஐ கேர் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், கிராம மக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர். சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'நெகிழியின் பாதிப்பு' என்ற தலைப்பில், மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. துணிப்பையின் நன்மையை விளக்கும் வகையில் வீடுகளுக்கு நேரடியாக சென்று இலவச துணிப்பை வழங்கப்பட்டது.