ஆவின் நிறுவனத்தில், 2020- - 21ம் ஆண்டுகளில் விதி மீறி செய்யப்பட்ட நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு, 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனுடன், 26 அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது. ஜனநாயக வழியில் நடக்கும் அரசு, முறைகேடு பற்றி தெரிய வரும்போது, தீவிரமாக விசாரித்து நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும் என்பதை, உங்கள் அரசு உறுதியாக செய்து காண்பித்துள்ளது. வாழ்த்துகள்.
சட்டவிரோதம்
கடந்த, 60 ஆண்டு களாக தமிழகத்தில் நடந்து வரும் ஒருபெரும் சட்ட மோசடியை தங்களின் கவனத்திற்கு எடுத்து வருகிறேன்.தமிழக ஹிந்து கோவில்களை, அறநிலையத்துறை சட்டத்திற்கு விரோதமாக, நுாற்றுக்கணக்கான செயல் அலுவலர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்; இது, 100 சதவீதம் சட்டவிரோதம்.
இந்த உண்மையை, அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்திருக்க மாட்டார்கள். அறநிலையத் துறையில் பணிபுரிந்த முன்னாள் கமிஷனர்களும், தற்போதைய கமிஷனருக்கும், இந்த உண்மை தெரிந்தே உள்ளது.
கடந்த 1927ம் ஆண்டு அறநிலைய சட்டங்கள் வாயிலாக அறிவிக்கை செய்து கோவில்கள் எடுக்கப்பட்டன.
இதில், ஸ்ரீரங்கம், மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்துார், பழநி உள்ளிட்ட 50 கோவில்கள், 1951ம் ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, அறிவிக்கை செய்த சட்டப் பிரிவுகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானவை எனக்கூறி அந்தப் பிரிவுகளை ரத்து செய்தது.
இதை, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வும், 1954ல் உறுதி செய்து, அந்த பிரிவுகளை நீக்கியது. அதன்பிறகும், 50க்கும் மேற்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட கோவில்களில் இருந்து, அறநிலையத்துறை வெளியேறவில்லை.கடந்த, 1956ல் அறிவிக்கையை, ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கிறோம் என்ற அரசாணையை, உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் அமர்வு மீண்டும் ரத்து செய்தது. அன்றில் இருந்து இன்றுவரை, அந்த கோவில்களில் அரசு சட்டவிரோதமாகவே இருந்து வருகிறது.
கடந்த, 1959ம் ஆண்டு அறநிலையத்துறை சட்டம், பிரிவு - 64ன் கீழ், ஒரு கோவிலுக்கு நிர்வாக திட்டம் ஏற்படுத்தும்போது, இணை, துணை கமிஷனர்களுக்கு செயல் அலுவலரை நியமிக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. இருப்பினும், செயல் அலுவலரை, கமிஷனர் நியமிப்பார் என்று சொல்லியே, பல்வேறு கோவில்களுக்கு நிர்வாகத் திட்டம் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், ஒரு கோவிலுக்கும் கூட, நிர்வாக திட்டத்திற்கு செயல் அலுவலரை, கமிஷனர் நியமிக்கவில்லை.
அதிகாரம் இல்லை
ஆனால், அறநிலையத்துறை சட்டம், 1959ன் பிரிவு - 45ன் கீழ், பல்வேறு கோவில்களுக்கு கமிஷனரால் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், இந்தப் பிரிவின் கீழ், சட்ட விதிகள் இயற்றப்படாமல், 1960ம் ஆண்டு துவங்கி, செயல் அலுவலர் நியமனங்களை, கமிஷனர் செய்துள்ளார். அப்படிச் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என, 2014ல் உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக தீர்ப்பளித்தது.
மேலும், செயல் அலுவலர் நியமன உத்தரவுகளில், தக்க காரணங்கள் சொல்லப்படவில்லை என்றாலும், செயல் அலுவலர் நியமனம் எத்தனை ஆண்டுகள் என்று குறிப்பிடாவிட்டாலும், அந்த உத்தரவு சட்டவிரோதம்; செல்லாது என்றும் தெளிவுபடுத்தியது.
கடந்த, 2015 நவம்பரில் இயற்றப்பட்ட பிரிவு, 45ன் சட்ட விதிகள் செல்லும் என்று கூறிய உயர்நீதிமன்றம், அந்தசட்டம் முன்தேதியிட்டு செல்லும் என்று அந்தத் தீர்ப்பில் கூறவே இல்லை. அவ்வாறு கூறினால், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமானது. ஆனால், உண்மைக்கு மாறாக, அறநிலையத் துறை அதிகாரிகள் அவ்வாறு கூறி வருகின்றனர்.
இவற்றைத் தவிர, 200 கோவில்களில் எந்த வித நியமன உத்தரவும் இன்றி, செயல் அலுவலர்கள் சட்ட விரோதமாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதம், சென்னை உயர்நீதி மன்றத்தின் அமர்வு, 47 கோவில்களின் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.இன்று வரை ஒரு கோவில் ஆவணம் கூட, சட்டப்படியான செயல் அலுவலர் நியமனம் குறித்து, அறநிலையத் துறையால், அந்த வழக்கில் நீதிமன்றத்தில் காண்பிக்க முடியவில்லை.
செயல் அலுவலர் நியமனம் முன் தேதியிட்டு செல்லத்தக்கவை என்று வைத்துக் கொண்டாலும், 2015ம் ஆண்டு செயல் அலுவலர் நியமன விதிகள், ஐந்து ஆண்டுகள் மட்டுமே, கமிஷனரால், செயல் அலுவலரை நியமனம் செய்யலாம் என்று கூறுகிறது.
நேர்மையான அதிகாரி
இவற்றை எல்லாம் பார்க்கும்போது, கோவில்களில் பணிபுரியும், 99 சதவீத செயல் அலுவலர்கள், பணி நீக்கம் செய்யப்பட்ட ஆவின் ஊழியர்கள் போல விதிமீறல்கள், சட்ட மோசடி வாயிலாக உள்ளனர் என்பது தெரியவரும்.எனவே, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 630 செயல் அலுவலர்கள் உள்ளனர் என்று அறநிலையத் துறை கூறுகிறது. அந்த துறையில் பணிபுரியாத நேர்மையான அதிகாரி ஒருவரின் தலைமையில், பட்டய கணக்காளர்களை வைத்து, கோவில்களில் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், செயல் அலுவலர்கள் தக்க உத்தரவின்படி நியமிக்கப்பட்டு உள்ளனரா என ஆய்வு செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
அந்த ஆய்வில், தக்க உத்தரவின்படி நியமிக்கப்படவில்லை என்று தெரிய வந்தால், கோவில் உள்ள நகரில், தகுதி படைத்த அறங்காவலர்கள் கையில், அந்த அந்தக் கோவிலை ஒப்படைக்க வேண்டும்.தமிழகத்தில், ஹிந்துக்களுக்கு தங்கள் வழிபாட்டு தலங்களை நிர்வாகம் செய்ய அரசியல் நிர்ணயச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பெற்றுத் தந்த முதல்வர் என்று, உங்கள் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும்.
தமிழக ஹிந்துக்கள் நீங்கள் செய்யும் உரிமை மீட்பை என்றும் மறக்காமல் இருப்பர்.- டி.ஆர்.ரமேஷ்-தலைவர்,ஆலய வழிபடுவோர் சங்கம்.