பொள்ளாச்சி:'ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிந்துரை செய்யப்படும் என்பது வெறும் அறிவிப்போடு இல்லாமல், பொங்கல் பண்டிகையின் போது செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் நன்மையாக இருக்கும்,' என, தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் பொள்ளாச்சி இளநீர், தேங்காய் என விற்கப்படுகிறது.
கடந்தாண்டு, எந்தாண்டும் இல்லாத அளவுக்கு தேங்காய், கொப்பரை விலை சரிந்தது. இதனால், தென்னை விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவை போன்று, தமிழகத்திலும் அரசு சார்பில், தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும். பள்ளிகளில் சத்துணவு மையத்துக்கு தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, கேரள போன்று கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்து, எண்ணெய் எடுத்து, ரேஷனில் மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை அறிவித்தார். அவரது மறைவுக்கு பின், அந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்ட வில்லை. அதன்பின், கருணாநிதி முதல்வராக இருந்த போது, ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்ய கொப்பரையில் எண்ணெய் எடுத்து, வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யும் திட்டத்தை துவங்கினார். இத்திட்டத்தில், ஊழல் துவங்கியதால், கைவிடப்பட்டது.
தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்து, எண்ணெய் எடுத்து ரேஷனில், மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காயும் விற்க வேண்டும். இதனால், வெளிமார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் விலை சரியாது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும், என, விவசாயிகளின் கருத்துக்களுடன் 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்த போது, இதற்கான எவ்வித நடவடிக்கையும் அ.தி.மு.க., தரப்பில் மேற்கொள்ளவில்லை. தற்போது, இந்த பிரச்னையை வலியுறுத்தி, பா.ஜ.,வினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில், கோவை வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ''ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது தொடர்பாக, கோவை மாவட்ட கலெக்டர், தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறார். இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
இது தேர்தல் அறிவிப்பு போன்று, வெறும் அறிவிப்போடு நிற்காமல் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அறிவிப்பால் மகிழ்ச்சி!
பரமசிவம், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர்: ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், என, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டரிடம்தொடர்ந்து, வலியுறுத்தி வந்தோம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,தமிழக அரசுக்கு கலெக்டர் பரிந்துரை செய்துள்ளதாகவும், தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும், என, அமைச்சர் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பை காலதாமதம் செய்யாமல் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
பொங்கலுக்கு வருமா?
பத்மநாபன், தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு இணை செயலாளர்: அமைச்சர் சக்கரபாணி, ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்குவதை பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகையில் இருந்து தேங்காய் எண்ணெய்யுடன், தேங்காயும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால், வெளிமார்க்கெட்டில் தேங்காய் சார்ந்த பொருட்களின் விலை சரியாது. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் 'சிண்டிக்கேட்' அமைப்பது தடுக்கப்படும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும்.
தாமதிக்க வேண்டாம்!
தங்கவேல், தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி: கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், 'நேபட்' கொள்முதல் செய்த கொப்பரையை, தனியார் மில்கள் வாயிலாக அரைத்து, தேங்காய் எண்ணெய்யாக மாற்றி வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் இத்திட்டம், ஒரு ஆண்டோடு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிந்துரை செய்வதாக அமைச்சர் அறிவித்தது வரவேற்கதக்கது. இது அறிவிப்போடு நிற்காமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.