அறிவியல் ஆயிரம்
உருகும் பனிப்பாறை
நிலக்கரி, எண்ணெய் போன்ற இயற்கை எரிபொருள் உற்பத்தி, பயன்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டால், 2100ம் ஆண்டுக்குள் உலகில் ஒவ்வொரு 5 பனிப்பாறைகளில் நான்கு அல்லது மொத்த பனிப்பாறைகளில் 80 சதவீதம் உருகி விடும் என அமெரிக்காவின் கார்னிஜி பல்கலை ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி உள்ளிட்ட நீர் தொடர்பான சுற்றுலா பகுதிகள் பாதிக்கப்படும். பருவநிலை மாறுபாட்டின் பாதிப்பை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மொத்த பனிப்பாறைகளின் எடையில் 41 சதவீதம் மறைந்து விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
பெரிய தியேட்டர்
ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருக்கைகள் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் பெரிய தியேட்டர் உள்ளது. இங்குள்ள 'கியூடட் டி லா இமேஜன்' எனும் மல்டி பிளக்ஸ் தியேட்டரில், 25 ஸ்கிரீன்கள் உள்ளன. மொத்தம் 9200 பேர் அமர்ந்து சினிமா பார்க்கலாம். இத்தியேட்டர் வளாகத்தில் 996 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஒன்று உள்ளது. இது 1998 செப்., 17ல் திறக்கப்பட்டது. அதேபோல உலகின் உயரமான தியேட்டர் பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உள்ளது. இதன் உயரம் 211 அடி. இதில் 18 ஸ்கிரீன்கள், 4300 இருக்கைகள் உள்ளன.