உடுமலை:ஏழை மக்களுக்கு நோயை வாரி வழங்கும், சுகாதாரமற்ற முறையில் இயக்கப்படும் கையேந்தி பவன்கள் மீது, உணவுப்பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு பணிகளுக்காக உடுமலை வருவோரின் பசியை, இங்குள்ள உணவகங்கள் தீர்த்து வைக்கின்றன. பெரும்பாலான கிராமவாசிகள் சிறிய, ரோட்டோர கையேந்தி பவன்களிலேயே உணவு உட்கொள்கின்றனர்.
இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய, பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் ரோட்டோர கையேந்தி பவன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரோட்டோர கடைகளில், உணவின் விலை குறைவு என்பதால், அதிகம் பேர் இங்கு செல்கின்றனர்.
பெரும்பாலான கையேந்தி பவன்கள், வண்டிகள் அல்லது கார்கள், ரோட்டோரங்கள், பூங்காக்கள், நடைபாதைகளிலேயே செயல்படுகின்றன.
இதனால், ரோட்டில் வாகனங்கள் செல்லும் போது, அவற்றில் இருந்து பறக்கும் துாசி, புகை உள்ளிட்டவை உணவில் கலக்கின்றன. பல கையேந்திபவன்கள், சாக்கடைகள் அருகிலேயே செயல்படுகின்றன.
அங்கிருந்து பறந்து வரும் ஈக்கள், கொசுக்கள், பூச்சிகள் உணவில், விழுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, இத்தகைய கையேந்திபவன்கள், சமையலுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகின்றன.
இதனால், தொடர்ந்து இந்த உணவை உட்கொள்பவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது உறுதி.
ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு, உணவுப்பாதுகாப்பு துறையினர் இத்தகைய கடைகள் மீது, கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.