பந்தலுார்;'நெல்லியாளம் நகராட்சியில் விதிகளை மீறி விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
'நெல்லியாளம் நகராட்சியில் நடக்கும் டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள், தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களின் பெயரில் வருங்கால வைப்பு நிதி செலுத்தி, அதன் ரசீதை ஒப்பந்தப்பு புள்ளி கோரும் போது விண்ணப்பத்தில் இணைத்து, வழங்க வேண்டும்,' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நகராட்சியில் மொத்தம், 56 ஒப்பந்ததாரர்கள் உள்ள நிலையில், தி.மு.க., வை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரின் குடும்பத்தில் உள்ள ஏழு ஒப்பந்ததாரர்கள், வருங்கால வைப்பு நிதி செலுத்தாமல் டெண்டரில் பங்கேற்று உள்ளனர். இவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள், நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்ட டெண்டரில், வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் ஜாபிர் தலைமையில், நிர்வாகிகள் ராமானுஜம், நஸ்ரு, ஆனந்தபகவான் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் இரவு முதல் நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், 'விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. தாசில்தார் நடேசன், டி.எஸ்.பி., செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
தொடர்ந்து நேற்று மதியம் பொறியாளர் வசந்த் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், 'நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரிடம் பேசி, அவர் உத்தரவுப்படி, குறிப்பிட்ட டெண்டர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்,' என, கடிதம் மூலம் உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து,நேற்று மதியம் ஒரு மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.