ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி 4வது வார்டில் கொசுத்தொல்லை, சுகாதாரக் கேடு, புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து கால்வாய், மழை பெய்தால்வீடுகளுக்கு புகும் மழை நீர், காட்சி பொருளாக நிற்கும் அடி குழாய்கள் என பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.
பெருமாள் பட்டி ஒன்றாவது மேலத்தெரு, கீழத்தெரு, செக்கடி தெரு ஆகிய பகுதிகளை கொண்ட இந்த வார்டில் பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிகள் சிதைந்தும், கழிவுகள், சுகாதாரக்கேடுடன் காணப்படுகிறது. செயல்படாத அடி குழாய்கள் காட்சி பொருளாக நிற்கிறது.
மொட்டை பெத்தான் கண்மாய் நீர் வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லை நிலவுகிறது. மழைக்காலங்களில் விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்த வார்டில் 3 சுகாதார வளாகங்கள் இருந்தும், கூடுதலாக பெண்களுக்கென தனியாக ஒரு சுகாதார வளாகம் அமைக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வரும் நிலையில், வார்டின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைகள் தினசரி சுத்தம் செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது.
வாகனங்கள் செல்லும் முக்கிய ரோடுகள் முறையாக இருந்தாலும்,சிறு சந்துகளில் உள்ள நடைபாதைகள் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
மெயின் ரோடுகள் உயர்த்தும் தெரு ரோடுகள் தாழ்ந்தும் இருப்பதால் மழை நேரங்களில் சாக்கடை நீர் தெரு தெருக்களிலும் குடியிருப்புகளிலும் புகுந்து விடுகிறது.
துாய்மையே அவசியம்
-ஜோதி முருகன், குடியிருப்பாளர்: மெயின் ரோடு, தண்ணீர், தெரு விளக்கு வசதிகள் போதுமானதாக இருந்தாலும் குறுகிய சந்துக்களில் சாக்கடைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.
தினசரி தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும். வடமலைக்குறிச்சி கண்மாய் நீர்வரத்து ஓடையை முழு அளவில் தூர்வாரி, தடுப்பு சுவரை உயர்த்தி கட்டி குப்பைகள் கொட்டாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
நகராட்சியில் கோரிக்கை
பாலமுருகன், கவுன்சிலர்:பெண்களுக்கு நவீன சுகாதார கட்டித் தரவும், பத்துக்கு மேற்பட்ட இடங்களில் தெருவிளக்குகள் பொருத்தவும் கூடுதலாக நான்கு சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும், குறுகிய தெருக்களில் ரோடுகளை சீரமைக்கவும், பழுதடைந்த சுகாதார வளாகத்தை எடுத்து விட்டு, நூலகம் கட்டித் தரவும் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கைகளை தெரிவித்துள்ளேன். -
குறைகள் நிவர்த்திசெய்யப்படும்
ரவி கண்ணன், நகராட்சி தலைவர், ஸ்ரீவில்லிபுத்துார்:வார்டில் மாஸ்கிளினீங் முறையில் சாக்கடைகள் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கவுன்சிலர் சுட்டிக்காட்டிய கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சீரான குடிநீர் வினியோகம் தடையின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. நிதி ஒதுக்கியதும் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.