வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: தமிழக மக்களின் நலன் கருதி கவர்னரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும், என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
பசுமைத்தாயகம் சார்பில், 'நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்' என்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு கோவை விமான நிலையம் வந்த பா.ம.க., தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:

நொய்யல் ஆறு, 40 ஆண்டுகளாக திட, ரசாயனம், சாயக்கழிவு, ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை போன்றவைகளால் சீரழிந்துள்ளது. மக்களை திரட்டி நொய்யலை மீட்டெடுக்க முயற்சி எடுப்போம். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளை முதலில் மீட்டெடுக்க வேண்டும்.
நொய்யல் ஆற்றை சீரமைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எதிர்காலத்தில் ஏற்பட உள்ள காலநிலை மாற்றங்களை தவிர்க்க, இதை சீரமைப்பது மிகவும் அவசியம்.
கூவத்தை சுத்தம் செய்ய இரு அரசுகளும், 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஆனால், கூவம் இன்னும் அப்படியே தான் உள்ளது. முன்பு துார்வார ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால், 10 லட்சம் ரூபாயை மட்டுமே செலவிட்டனர்.

தமிழக மக்களின் நலன் கருதி கவர்னரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும். கவர்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசும், கவர்னரின் செயல்பாடுகளில் தலையிடக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. அதைப்பற்றி கவலைப்படாமல், தமிழகமா, தமிழ்நாடா என்ற விவாதம் தேவையற்றது.
பா.ம.க., தலைமையில், 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.