வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில், மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கண்காணிப்பு 'கேமரா'க்கள் பொருத்தப்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் இருந்து வரும் புகார்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை, நேற்று செயல்பாட்டிற்கு வந்தது.

பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மத்திய அரசு நிதிஉதவியுடன், மாநிலங்களில் 'நிர்பயா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, தமிழகத்திலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில், கண்காணிப்பு கேமராக்கள் இரண்டு கட்டமாக பொருத்தப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக, 500 பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அதன் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு மே 14ம் தேதி துவக்கி வைத்தார். பின், பேருந்துகளில் இருந்து பெண்களுக்கு அச்சுறுத்தல் தொடர்பான புகார்கள் ஏதும் வரவில்லை,
இதையடுத்து, இரண்டாம் கட்டமாக, 72.25 கோடி ரூபாய் செலவில், 2,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்தன.
இத்துடன் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 66 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடந்தது.
அதில் இதுவரை, 1,830 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என, மொத்தம் 63 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து உள்ளது.
இதன்படி, ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளுடன் சேர்த்து, இதுவரை 2,330 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இவற்றில், தலா ஒரு 'வீடியோ ரெக்கார்டர்' மற்றும் மூன்று கண்காணிப்பு கேமராக்கள், நான்கு அவசர கால பொத்தான்கள், ஒலிப்பெருக்கி ஆகியவையும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த அமைப்பு பொருத்தப்பட்ட பேருந்தில் பயணிக்கும் மகளிர், குழந்தைகளின் பாதுகாப்பில் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அங்குள்ள அவசர கால பொத்தானை அழுத்த வேண்டும்.
அப்போது, தானியங்கி 'வீடியோ ரெக்கார்டர்' ஒரு நிமிட வீடியோவை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அத்துடன், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பான், அவசர கால ஒலி எழுப்பும். இதனால் எச்சரிக்கையடையும் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தலாம். குற்றவாளிகளை நடத்துனர் கண்டறியலாம். பயணியரும் விழிப்படையும் வாய்ப்பு ஏற்படும்.
அதேநேரம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளிக்கப்படும். புகாரின் உண்மைத் தன்மையின் அடிப்படையில், பேருந்தில் உள்ள ஜி.பி.எஸ்., வழியாக பேருந்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
பேருந்துகளில் இருந்து வரும் புகார்களை கண்காணிக்கும் வகையில், சென்னை பல்லவன் இல்லத்தில், 40 அடி நீளம், ஏழு அடி உயரம் உள்ள காட்சித் திரையுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, 16 கணினி இயக்குவோர், இதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் பேருந்துகளின் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், நேற்று முதல் இயக்கத்துக்கு வந்தன.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை மாநிலக் கல்லுாரி மாணவியர் புறாக்களைப் பறக்க விட, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, பல்லவன் இல்லத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து செயலர் கோபால், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆப்ரகாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.