அறிவியல் ஆயிரம்
மீளும் ஓசோன் படலம்
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்களை தடுப்பதில் ஓசோன் படலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓசோன் படலத்தை பாதிக்கும் வாயுக்களை கட்டுப்படுத்த 1987ல் உலக நாடுகள் ஒப்பந்தம் செய்தன. இந்நிலையில் ஓசோன் படலம் மெதுவாக மீண்டு வருகிறது. 2040க்குள், ஓசோன் படலம் 1980க்கு முன்பு இருந்த நிலையை அடையும் என ஐ.நா., ஆய்வு தெரிவித்துள்ளது. அண்டார்டிகா மேல், 89 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவிலான ஓசோன் படல ஓட்டை, 2066க்குள் சரியாகும். ஆர்க்டிக் மேல் உள்ள ஓசோன் படல பாதிப்பு 2045க்குள் சரி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
தேசிய இளைஞர்கள் தினம்
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1863 ஜன., 12ல் கோல்கட்டாவில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஆன்மிக சிந்தனை கொண்ட இவர் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். 1881ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். 1886ல் துறவியாக மாறினார். துறவிகள் என்றால் சாதுக்களாக மட்டுமல்லாமல் வீரமாகவும் இருக்க வேண்டும் என்பார். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பண்பாடு, கலாசாரம் குறித்து போதித்தார். மேலை நாடுகளிலும் சொற்பொழிவு நடத்தியுள்ளார்.