காஞ்சிபுரம்:மார்கழி மாதத்தின் கடைசி நாளான வரும் 14ம் தேதி, போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இப்பண்டிகையின்போது, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கு உதாரணமாக, வீட்டில் உள்ள, தேவையற்ற பாய், முறம், துடைப்பம், அட்டைப் பெட்டி உள்ளிட்ட பழைய பொருட்களை, வீட்டு வாசல் முன் குவித்து, அதிகாலையில், தீ மூட்டி எரிப்பர்.
அப்போது வீட்டில் உள்ள சிறுவர்கள், மார்கழி மாதத்திற்கு விடை கொடுத்து, தை பொங்கலை உற்சாகத்துடன் வரவேற்கும் விதமாகவும், வெட வெடக்கும் குளிருக்கு, கத கதப்பாக இருக்கும் வகையில், வாசலில் எரிய விடும் தீயை சுற்றிலும் அமர்ந்து குளிர் காய்ந்தபடியே, சிறிய அளவிலான மேளத்தை கொட்டியபடி, 'போகியோ... போகி' என கூறுவர்.
இதையொட்டி, காஞ்சி புரத்தில், வெங்கடேசபாளையம், ரெட்டிபேட்டை திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களுக்கான போகி மேளம் தயாரிப்பு பணி, இரு மாதங்களாக நடந்து வந்தது.
தயார் செய்யப்பட்ட மேளங்கள், காஞ்சிபுரம் ரயில்வே சாலை, காந்தி சாலை, சேக்குபேட்டை, செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மேளம், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போகி பண்டிகைக்கு இரு நாட்களே உள்ள நிலையில், போகி மேளம் விற்பனை சூடுபிடித்துஉள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.