மும்பை: நடப்பு நிதியாண்டில், நகை விற்பனையாளர்களின் வருவாய் 20 சதவீதம் உயரக்கூடும் என, தர நிர்ணய நிறுவனமான 'இக்ரா' தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஒழுங்கமைக்கப்பட்ட நகை விற்பனையாளர்களின் வருவாய், நடுத்தர கால அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்படாத சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து சந்தை தேவை இடம்பெயர்வது மற்றும் திட்டமிட்ட சில்லரை விற்பனை விரிவாக்கம் போன்ற காரணங்களால், ஒழுங்கமைக்கப்பட்ட நகை விற்பனையாளர்களின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், வருவாய் வளர்ச்சி 20 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
உள்நாட்டு தங்க நகை சில்லரை வர்த்தகம், நடப்பு நிதியாண்டில் 15 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கலாம். அடுத்த 12 முதல் -18 மாதங்களில், மொத்த நகை கடைகளின் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.