சென்னை:ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில், 90.20 கோடி ரூபாயில் மறுசீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ரயில்வேயின் மறுசீரமைப்பு திட்டத்தில், தெற்கு ரயில்வேயில், எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒன்பது ரயில் நிலையங்கள், சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளன.
ஏற்கனவே, எழும்பூர், மதுரை, எர்ணாகுளம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், மறுசீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை, 90.20 கோடி ரூபாயில் மேம்படுத்த, சபரி, யூ.ஆர்.சி., கட்டுமான நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
ராமேஸ்வரம் கோவிலை மாதிரியாக வைத்து, நுழைவு பகுதி வடிவமைக்கப்பட உள்ளது. மண் பரிசோதனை, நிலப்பரப்பு தேர்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாகன நிறுத்தம், 'எஸ்கலேட்டர்கள், லிப்ட்' உள்ளிட்ட பல்வேறு வசதிகள், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது. மறு சீரமைப்பு பணிகள், 18 மாதங்களில் முடிக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.