சென்னை:கடந்த ஆண்டில், 206 கிலோ தங்கம், 14 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 94.22 கோடி ரூபாய் மதிப்பிலான, 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாய், சார்ஜா உள்ளிட்ட வளைகுடா நகரங்களில் இருந்து, அதிகளவில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது.
இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, 10.97 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த, 14 கோடி ரூபாய் மதிப்பிலான, 27.66 கிலோ 'ஹெராயின், மெத்தகுலோன், கொகைன்' ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிநாட்டில் இருந்து, 'டாமரின்' குரங்குகள், மலைப்பாம்பு குட்டிகள், நரிக்குட்டிகள், 'கஸ்கஸ்' எனும் குள்ள விலங்குகள் உட்பட, 134 அரிய வகை வன விலங்குகள், 2022ல் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில், 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்கள் மற்றும் நவரத்தினங்கள் கடத்தப்பட்டுள்ளன. மேலும், 3.90 கோடி ரூபாய் மதிப்பிலான சிகரெட்டுகள், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2022ல் மட்டும், 124.88 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், போதைப்பொருட்கள் சிக்கியுள்ளன; 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 122 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, சென்னை விமான நிலைய கமிஷனர் மேத்யூ ஜோளி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ல், 262 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பிடிபட்டன. இதில், 70.12 கோடி ரூபாய் மதிப்பிலான, 157 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல, 181 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் அதிகபட்சமாக, 170 கோடி மதிப்பில், 25.44 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2021ல் அதிக அளவு விமானங்கள் இயக்கப்படாத நிலையில், 262 கோடி ரூபாய் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. ஆனால், 2022ல் அதிகளவு விமானங்கள் இயக்கப்பட்டும், 125 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே கடத்தப்பட்டுள்ளன.