மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதிகளுக்கு, மறைமலை நகர் மற்றும் காட்டாங்கொளத்துார் மின் வாரிய அலுவலகங்களில் இருந்து, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
அதற்காக, சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் கம்பிகள் வழியாக மின்சாரம் செல்கிறது. காவல் நிலையம் -- சித்தமனூர் செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ள மின் கம்பம், மிகவும் சிதிலமடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
காற்றில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் வகையில், மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. எனவே, அந்த பகுதியை கடந்து செல்லும்போது, வாகன ஓட்டிகள் ஒரு வித அச்ச உணர்வுடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, இந்த சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.