'எப்போதுமே விசுவாசிகளுக்கு, எங்கள் கட்சியில் மரியாதை உண்டு; அதற்கு இவர் தான் சிறந்த முன் உதாரணம்...' என, குஜராத் மாநில, பா.ஜ., தலைவர், சி.ஆர்.பாட்டீல் குறித்து பெருமையாக பேசுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
இங்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதுவரை இல்லாத வகையில் இந்த தேர்தலில், பா.ஜ., 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர படேல்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தேர்தல் வியூகமும், சூறாவளி பிரசாரமும் தான், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், கட்சியின் மாநில தலைவர், சி.ஆர்.பாட்டீலின் கடுமையான உழைப்பும், இந்த வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தது. பாட்டீலின் உழைப்புக்கு பரிசளிக்க, பா.ஜ., தலைமை தற்போது முடிவு செய்துள்ளது. 'கட்சியின் தேசிய தலைவர் நட்டாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால், அந்த பதவியை பாட்டீலுக்கு கொடுக்கலாம்' என்ற பேச்சு அடிபட்டது.
ஆனால், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் என்ற முக்கிய பதவிகளில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளதால், கட்சி தலைவர் பதவியையும் அந்த மாநிலத்தவருக்கே கொடுத்தால், சர்ச்சை ஏற்படும் என்று, மேலிடம் கருதுகிறது.
இதனால், மத்திய அமைச்சரவையில் முக்கியமான பதவியில், பாட்டீலை அமர வைத்து அழகு பார்க்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையறிந்த குஜராத் பா.ஜ.,வில் உள்ள பாட்டீல் ஆதரவாளர்கள், 'இது, உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை...' என, பெருமையுடன் பேசுகின்றனர்.