பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஒரு செடி நட்டால், அவர்களுக்கு நான் வாழ்த்து சொல்வேன். நான் அனுப்பிய வாழ்த்துக்கு சிலர், 'ஓகே' என்று சொல்லும் போது, எனக்கு அர்த்தம் புரிவதில்லை. சிலர், 'தேங்க் யூ ஐயா' என கூறுகின்றனர். 'நன்றி' என, தமிழில் சொல்ல யாருக்கும் தெரியவில்லை.
டவுட் தனபாலு: மருத்துவரின் வருத்தம் நியாயமானது என்பதில் டவுட்டே... மன்னிக்கணும், சந்தேகமே இல்லை... அதே நேரம், இவரது பெயரில் கூட ராமதாஸ் என்ற வடமொழி வாசனை தானே வீசுகிறது... அதை, துாய தமிழில், 'ராமன் அடிமை' என மாற்றி, தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் என்ன?
பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி: தமிழக கவர்னர் என, ஊடகங்கள் அழைக்கின்றன. மாநில அரசு விளம்பரத்தில், 'தலை நிமிர்கிறது தமிழகம்' என்று கூறுகிறது. தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா; இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமான வார்த்தையா?
டவுட் தனபாலு: இவங்க மட்டும் ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர்னு பக்கம் பக்கமா பேசுவாங்க, எழுதுவாங்க... அதை எல்லாம் கேள்வி கேட்காம சகித்துக் கொள்ளணும்... தமிழகம் என யாராவது சொன்னால் மட்டும், வீறு கொண்டு எழுவது எந்த ஊர் நியாயம் என்ற, 'டவுட்' எழுகிறதே!
காங்., - எம்.பி., ராகுல்: நான், 'டி - ஷர்ட்' அணிவது குறித்து, பலரும் கேள்வி எழுப்புகின்றனர். மத்திய பிரதேசத்தில், மூன்று ஏழைப் பெண்களை சந்தித்தேன். சரியான உடை அணியாததால், அவர்கள் குளிரில் நடுங்கினர். அப்போது தான், எனக்கு நடுக்கம் ஏற்படாத வரை, தொடர்ந்து டி - ஷர்ட் மட்டும் அணிவது என முடிவெடுத்தேன்.
டவுட் தனபாலு: எங்க ஊர் மதுரைக்கு, 1921ல் வந்த மகாத்மா காந்தி, ஏழை மக்கள் உடுக்க உடையின்றி திரிவதை பார்த்து, 'இனி வாழ்நாள் முழுதும் அரையாடையே உடுத்துவேன்' என, சபதம் எடுத்ததா வரலாறு சொல்லுது... அதே மாதிரி, குளிரில் வாடிய பெண்களுக்கு தன், 'டி - ஷர்ட்'களை வாரி கொடுத்திருந்தா, 'டவுட்'டே இல்லாம ராகுலை பாராட்டி இருக்கலாம்!