திருவாலங்காடு:திருவாலங்காடு சன்னிதி தெருவில் செயல்படும் இந்தியன் வங்கிக்கு, மணவூர், சின்னம்மாபேட்டை, கூடல்வாடி, வீரராகவபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25,000க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
மகளிர் குழு மற்றும் முதியோர் உதவித்தொகை, வாடிக்கையாளர் என 700க்கும் மேற்பட்டோர், தினமும் வங்கிக்கு பணம் பரிவர்த்தனை செய்ய வந்து செல்கின்றனர்.
இதனால் எப்போதும் வங்கியில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், சமீபகாலமாக இருசக்கர வாகனத்தில் வருவோர், வங்கி எதிரே உள்ள சாலையின் இருபுறமும் தாங்கள் வரும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வங்கிக்குள் செல்கின்றனர்.
இதனால் அந்த சாலை வழியாக வரும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சென்று வர முடியாத அளவு நெரிசல் ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை, திருவாலங்காடு போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.