திருத்தணி:திருத்தணி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை குறித்து, திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் சைக்கிள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அமுதா வரவேற்றார். திருத்தணி நகராட்சி உறுப்பினர் தீபாரஞ்சனி, மாணவியரின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, 60க்கும் மேற்பட்ட மாணவியர், மேட்டுத் தெரு, பாரதியார் தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.
பிளாஸ்டிக், டயர் மற்றும் துணிமணிகள் எரிக்கக்கூடாது என கூறி, வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கி மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.