பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து, பொதட்டூர்பேட்டை வழியாக, திருத்தணி செல்லும் சாலையில், பள்ளிப்பட்டு வனச்சரக அலுவலகம் எதிரே, கடந்த ஆண்டு தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது.
அதை தொடர்ந்து, தரைப்பாலத்திற்கு இணைப்பு சாலையும் போடப்பட்டது. இந்த இணைப்பு சாலை தரமாக அமைக்கப்படாததால், மீண்டும் மீண்டும் சேதம் அடைந்து வருகிறது. சீரமைத்தாலும், மீண்டும் குண்டும் குழியுமாக உருக்குலைந்து விடுகிறது.
இந்த மார்க்கமாக, தினசரி ஏராளமான கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்களும், உணவு பாதுகாப்பு கிடங்கில் இருந்து உணவு பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.
இதனால், தரைப்பாலத்தின் இணைப்பு சாலையை, உறுதியான கான்கிரீட் கொண்டு சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.